சென்னை: பேருந்துகளில் அராஜகம் செய்யும் மாணவர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இனிமேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக சென்னையில் கல்லூரி மாணவர்களியே மோதல், ரூட் தல பிரச்சினை, பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் பேருந்துகள் மற்றும் ரயில்களில் அநாகரி செயல்பாடுகள் மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ‘#ரூட்தல’ பிரச்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களை மடக்கிய காவல்துறையினர் அவர்களிடம்  பட்டாக்கத்திகள், பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதுபோல, ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் மற்றும் சென்னை மாநில கல்லூரி மாணவர்களிடையேயும் அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று மந்தைவெளியில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற 21 என்ற எண் கொண்ட பேருந்தில் புதுக்கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்று தாளம் போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர். இதனால் பேருந்து ஓட்டுநர் சங்கர் அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களை கண்டித்துள்ளார்.  இதனால் கல்லூரி மாணவர்கள் சுமார் 30 நபர்கள் நடத்துனர் ஜெரின் என்பவருடன் தகராறில் ஈடுபட்டு பேருந்திலிருந்து கீழே தள்ளியதால் தலையில் காயம் ஏற்பட்டது.

உடனே பயணிகள் மாணவர்களை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினர். அப்போது பணிமனையில் இருந்த மற்றொரு நடத்துனர் அருண்குமார் தப்பி சென்ற மாணவர்களை பிடிக்க முயன்ற போது தவறி கீழே விழுந்து அவருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்துனரை தாக்கியது தொடர்பாக 4 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதேபோல 52 பி என்ற பேருந்தில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பேருந்து சைதாப்பேட்டை பணிமனை அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்த போது, பணிமனை கிளை மேலாளர் அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களை உள்ளே செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. மாணவர்கள் பணிமனை கிளை மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முற்பட்டதால், ஓட்டுநர், நடத்துனர் ஆகியோருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் 3 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இது பயணிகளிடையே அரசு மற்றும் காவல்துறை மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி மாணவர்களின் அடாவடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்காமல்,  இந்த  விவகாரத்தில் சென்னை காவல்துறை மென்மையான போக்குடன் செயல்படுவதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், மாணவர்கள் நடவடிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க காவல்துறை திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும்,  அரசுப் பேருந்து நடத்துநர்கள், மாணவர்களிடம் தாளம் போட வேண்டாம், ஆட வேண்டாம் என்று மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக உள்ளது என்று அறிவுறுத்துகின்றனர். அதைக் கேட்டு மாணவர்கள் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். அதனை மீறுவதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. பேருந்து ஓட்டுநரை தாக்குவது உள்ளிட்ட  அநாகரிக செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,   இதற்கு முன்புவரை, கல்லூரி மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடும் என்பதால், மென்மையாக கையாண்டோம். இனிமேல் அப்படியிருக்காது, இதுவொரு எச்சரிக்கை போன்றதுதான். தொடர்ச்சியாக இதுபோன்ற புகார்கள் வந்தால், மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.