சென்னை

பொதுமக்கள் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக இது வலுப்பெறக்கூடும்.

பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து முற்பகல் தெற்கு  ந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து, வரும் 5 ஆம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும், மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாகக் கடக்கக்கூடும்.

இந்தப் புயலுக்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிகக் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது, புயல் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.