சென்னை: சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா கடந்த மாதம் 27ம் தேதி விடுதலையானார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா குணமான நிலையில் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
நாளை மறுதினம் அவர் சாலை மார்க்கமாக பெங்களூருவில் இருந்து சென்னை வர உள்ளார். அவருக்கு வழிநெடுக பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சென்னையில் போரூரில் இருந்து சென்னை நகருக்குள் வரும் வழியில் 12 இடங்களில் வரவேற்பு அளிக்க, சசிகலாவின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் சென்னை மாநகர காவல்துறையிடம் அனுமதி கோரி இருந்தார்.
ஆனால், அவரது கோரிக்கையை சென்னை போலீஸ் கமிஷனர் இன்று காலை நிராகரித்து விட்டார். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பதற்றத்திலுள்ள சிலர் சதி செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்கக்கூடாது!
எல்லா இடங்களிலும் கழக உடன்பிறப்புகள் கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.