சென்னை ரயிலில் தீ! நிர்வாக கோளாறே காரணம்!
பெருங்குடி , சென்னை :
சென்னை ( chennai ) பெருங்குடி (perungudi) ரயில் நிலையம் அருகே பறக்கும் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு பெட்டி முழுதும் எரிந்து சாம்பலானது. இதற்கு ரயில்வே நிர்வாகத்தின் குளறுபடியே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி (velachery) வரையிலான பறக்கும் ரயில், நேற்று காலை 8.30 மணி அளவில், பெருங்குடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஐந்தாவது பெட்டியில் திடீரென தீ பரவியது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை முற்றிலும் அணைத்தன. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
ரயில்வேதுறை ஐ.ஜி, சீமா அகர்வால் உட்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றனர்.
ஆனால் பொது மக்களோ, “சமீபத்தில், கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே பறக்கும் ரயில் தடம் புரண்டது. அப்போதும் இது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோகிரி அறிவித்தார்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பார்கள். அது போல, ரயில்வே துறையின் நிர்வாக சீர்கேடு, பணியாளர்கள் அலட்சியம்தான் இது போன்ற விபத்துக்களுக்குக் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.
பறக்கும் ரயிலில் பல பெட்டிகளில் இருக்கைகள் உடைந்து கிடக்கும். தினமும் பல்லாயிரம் பேர் பயணம் செய்யும் இந்த ரயில்களின் லட்சணம் இதுதான். ( இது குறித்து கடந்த மாதம் முப்பதாம் தேதி patrikai.com இதழில் செய்தி வெளியிட்டுள்ளோம். இணைப்பு கீழே..)
ரயில் ஓடும்போது சில பெட்டிகளில் கதவு தானாக திறந்துகொள்வதும் உண்டு, சமீபத்தில் அப்படி நடந்த போது வாசல் அருகில் நின்ற இருவர் கீழே விழப்போனார்கள். நல்லவேளையாக அவர்களை மற்ற பயணிகள் பிடித்தார்கள்.
அதேபோல சில பெட்டிகளில் ஜன்னல் கதவு தனியாக ஆடும். அதை கம்பி வைத்து கட்டியிருப்பார்கள்.
அது மட்டுமல்ல… ரயில் பெட்டியின் உள்ளே இருக்கும் மின் தொடர்புகள் உள்ள பெட்டி திறந்தே கிடக்கும். தெரியாமல் அதில் யாராவது கையை வைத்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. தவிர இந்த மின் பெட்டி திறந்து கிடந்ததால் கூட, உள்ளே வயர்களுக்குள் தவறான இணைப்பு ஏற்பட்டு தீ பிடித்திருக்குமோ என்னவோ?” என்று ஆதங்கத்துடன் கூறினார்கள்.
மேலும், “ரயில்வேயின் நிர்கவாக குளறுபடிக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். காலை மாலை நேரங்களில்தான் மிக அதிகமாக கூட்டம் வரும். இந்த சமயத்தில் வேளச்சேரியில் மூன்று டிக்கெட் கவுண்ட்டர்களில் பெரும்பாலும் ஒருவர்தான் இருப்பார். ஆனால் கூட்டம் இல்லாத மதிய நேரத்தில் இரண்டு கவுண்ட்டர்களில் ஆட்கள் இருப்பார்கள். தவிர பறக்கும் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் மிசின்கள் பல இயங்குவதில்லை” என்று புகார் பட்டியல் வாசிக்கிறார்கள் பயணிகள்.
தமிழக அரசு பேருந்தில் பயணித்த பெண் பஸ்ஸில் இருந்த ஓட்டையால் சாலையில் விழுந்த படம் வாட்ஸ் அப்களில் பரவி, தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் லட்சனத்தை உலகுக்கு பறைசாற்றின.
அதே கதியில்தான் இருக்கிறது ரயில்வே நிர்வாகமும், பெரும் விபத்து ஏற்பட்டு அப்பாவி பயணிகள் பலியாவதற்கு முன்பு நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டும்.