gandhi

காந்தி ரத்தம் சுவைத்த மிருகம் ஆர்.எஸ்.எஸ் ! : எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ.

ட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, குழந்தையையும் கடித்து விட்டது அந்த மிருகம்.

அவனை கொலை செய்தார்கள், நமக்கென்ன என்று இருந்தேன். இவனை கொலை செய்தார்கள் நமக்கென்ன என்று இருந்தேன். கடைசியில் அவர்கள் என்னை கொல்ல வந்த போது, மற்றவர்கள் நமக்கென்ன என்று இருக்கிறார்கள். ஒரு புகழ் பெற்ற கவிதையின் சுருக்க வடிவம் இது.

தபோல்கரையும், பன்சாரேயையும், கல்பர்கியையும் கொன்று தீர்த்த போதே வெகுண்டெழுந்திருக்க வேண்டும். தூக்கத்தில் இருந்த சமூகத்தை விழித்தெழ செய்யவே எழுத்துத் துறை ஆன முயற்சிகளை செய்தது.

ஆனால் அவை தூக்கத்தில் இருந்த யானை மீது விழுந்த சிறு கற்களாகிப் போயின. திருப்பி அனுப்பப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகள் சிறு கற்களாகி வீழ்ந்தன. வீழ்ந்தது விருதுகள் அல்ல, சமூகம்.

அப்போது பகுத்தறிவாளர்கள் தானே வீழ்த்தப்பட்டார்கள், நமக்கென்ன என இருந்தது ஏனைய சமூகம். அறிவு முடித்து மதத்தின் மீது பார்வையை திருப்பியது மிருகம்.

தாத்ரியில் அவர் மாட்டுக்கறி தின்றார் என்பது ஒரு வதந்தி தான். அதுவே தீயாக்கப்பட்டது. நீண்ட நாள் திட்டத்திற்கு உருக் கொடுக்க வாய்ப்பு வந்தது, என மகிழ்ந்தே போனது மிருகம். ரத்த வாடையை மோப்பம் பிடித்தது. அதுவும் இஸ்லாமிய ரத்தம்.

நாக்கை சுழற்றிக் கொண்டு திரிந்தது. முகம்மது அக்லக் உயிர் பறி போனது. அவர் குடும்பம் ஊர் தங்க முடியவில்லை. டெல்லிக்கு விரட்டப்பட்டது. கேட்க நாதியில்லை. கேட்டவர்கள் மிரட்டப்பட்டார்கள்.

இப்போதும் சமூகம் தூங்கிக் கொண்டிருந்தது, வீழ்ந்தது இஸ்லாமியன் தானே நமக்கென்ன என இருந்தது. மாட்டுக்கறி முடிந்து குழந்தைக் கறிக்கு பாய்ந்து விட்டது அந்த மிருகம்.

இனி ஆயிரம் காரணம் சொல்வார்கள். ஆனால் இரண்டு குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டு விட்டனர். காரணம் அது தான். கொல்லப்பட்ட குழந்தைகள் தாழ்ந்த சாதி, கொன்ற நாய் உயர் சாதி. மூன்று வயது குழந்தையும், ஒன்பது மாதக் குழந்தையும் கத்தி தூக்கியா நின்றன?

எஸ்.எஸ். சிவசங்கர்
எஸ்.எஸ். சிவசங்கர்

கர்நாடகா, மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் என டெல்லி அருகே ஹரியானா வரை உலா தொடர்ந்து விட்டது மிருகம். பகுத்தறிவாளர், இஸ்லாமியர் என அடுத்து இந்துக்கள் மீதும் பாய்ந்து விட்டது மிருகம். ஒடுக்கப்பட்டோர் இந்துக்கள் தானே ?

இப்போதும் சமூகம் தூங்கும். ஒடுக்கப்பட்ட இன குழந்தைகள் தானே எரிந்து போனார்கள், நமக்கென்ன என இருக்கும்.

ஆனால் அந்த மிருகம் ரத்த வெறி பிடித்தது. 1948 ஜனவரி 30ல் சுவைத்த ரத்தத்தின் ருசி, அதற்கு பசியை அதிகப்படுத்தி விட்டது. இடையில் சிறிது காலம் வேஷம் மாற்றிக் கொண்டு திரிந்தது. மிருகம் சைவமாகி விட்டது என நாடு நினைத்தது. அதிகார தீனியை போட்டு பெருக்க வைத்து விட்டது.

மீண்டும், தான் மிருகம் தான் என்பதை தனக்கே உறுதிப்படுத்திக் கொள்ள, ரத்த வேட்டையை துவங்கி விட்டது.

பகுத்தறிவாளர், இஸ்லாமியர், ஒடுக்கப்பட்டோர் என வரிசை இத்தோடு நிற்காது. நம் வரை தொடரும்…

# காந்தி ரத்தம் சுவைத்த மிருகம் ஆர்.எஸ்.எஸ் !