சென்னை

சென்னை பரங்கிமலை திடீர் மின்தடையால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு மக்களைத் தவிப்பில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரயில் சேவை உள்ளது. குறிப்பாக கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் அதிகப்படியான பயணிகள் பயணித்து வருகின்றனர். இது அன்றாட பணி மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்னை வருபவர்களுக்கு குறைந்த செலவில், விரைவாக செல்ல பெரிதும் பயன்படுகிறது.

வழக்கம் போல நேற்று காலை முதல் கடற்கரை- தாம்பரம் மற்றும் தாம்பரம்-கடற்கரை நோக்கி மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்று மாலை 5.30 மணியளவில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

எனவே தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில்கள் பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. எந்த அறிவிப்பும் இல்லாமல் ரயில்கள் வெகு நேரமாக நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி போன்ற ரயில் நிலையங்களிலும் ரயில் வெகுநேரம் வராததால் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஒரு சில பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் பயணித்தனர்.  இந்த் பாதிப்பு தாம்பரம் – கடற்கரை இடையே ஏற்பட்டதால் கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்களும் மெதுவாக இயக்கப்பட்டன.

மின்தடை பாதிப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சரி செய்யப்பட்டு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடற்கரை நோக்கி புறப்பட்டு சென்றது. பிறகு கடற்கரை-தாம்பரம் வழித்தடத்திலும் மின்சார ரெயில் சேவை சீரானது.

Chennai, Electric train service, affected, power failure,