சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது தெரியாமல் அதைக் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் 30 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த திருவீதி, வரலட்சுமி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

திருவீதி என்பவர் நேற்றிரவே உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பு அதிகரித்ததை அடுத்து பல்லாவரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பல்லாவரம் மற்றும் ஆலந்தூரில் குடிநீருடன் கழிவுநீர்
கலந்ததாக வெளியான தகவலை அடுத்து அப்பகுதிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்றிருந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உணவில் பிரச்சனை இருந்ததாலேயே உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார்.

அப்போது, குடிநீரில் குளோரின் கலப்பதில்லை எனக்கூறிய செய்தியாளருடன் அமைச்சர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.