சென்னை :
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகள் அனைத்தையும் நேற்று முதல் மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
நேற்று, சென்னை புரசைவாக்கம் பகுதியில் இயங்கும் வணிக நிறுவனத்தை மூட சொல்லி அறிவுறுத்திய போதும் திறந்திருந்ததால் அந்த வணிக வளாகத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னையின் முக்கிய வணிக பகுதியான தி. நகரில் உள்ள பெரு வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடியிருக்கிறது.
ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு என அனைத்து பகுதிகளிலும் கடைகள் இன்று
மூடி இருக்கிறது, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், ரங்கநாதன் தெருவில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இங்குள்ள பெரு வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இம்மாத இறுதியில் மீண்டும் கடை திறக்கும் வரை இங்கேயே தங்க அனுமதிக்கப்படுவார்களா அல்லது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆனாலும், ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லப்படும் தி. நகரின் பாண்டி பஜார் பகுதியில் உள்ள கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன.