சென்னை:
மாநில தலைநகர்  சென்னையின் புதிய காவல்ஆணையாளராக இன்று பொறுப்பேற்றுள்ள  மகேஷ் குமார் அகர்வால், ஏற்கனவே சிபிஐ-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது தலைமை யின் கீழ் சென்னை மாநகரம் குற்றமில்லாத, அமைதியான மாநகரமாக மாறும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

1994-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வாலின் சொந்த மாநிலம் பஞ்சாப். அங்குள்ள  பத்திண்டா என்ற ஊரில் பிறந்தவர். 48வயது நிறைந்த இவர் 1972ல் பிறந்தார். சட்டப்பிரிவில் பி.ஏ.பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப்படிப்பும் படித்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் புலமை வாய்ந்தவர்.
ஏடிஜிபி (ஆபரேஷன்ஸ்) பதவி வகிப்பதற்கு முன்பு,  பல பிரதான பதவிகளில் பணியாற்றியுள்ளார். குற்றப்பிரிவு – குற்றவியல் விசாரணை அலுவலகத்தில் சட்ட அமலாக்கத்தின் வழக்கமான இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னர் அவர் மதுரை டவுன் போலீஸ் கமிஷனராகவும் இருந்தார்.
தமிழகத்தில் முதன்முதலாக தேனியில் எஸ்பியாக பணியைத் தொடங்கிய மகேஷ்குமார், பின்னர் பணி மாற்றம் பெற்று  சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது,  ‘‘நைட் கிரைம் டு ஜீரோ’’ என்ற திட்டத்தை காவல்துறையில் அறிமுகப் படுத்தி இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக சென்னையில் குற்றச்சம்பவங்கள் பெருவாரியாக தடுக்கப்பட்டன,
சென்னை போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர், தூத்துக்குடி எஸ்பி ஆகிய முக்கிய பதிகளை வகிந்த வந்த நிலையில், இடையில் சிறிது காலம் மத்தியஅரசு பணிக்கு சென்றார்.
பஞ்சாப் தலைநகர்  சண்டிகார் நகரில் சிபிஐயில் அதிகாரியாக பொறுப்பேற்று, அங்கு  7 ஆண்டுகள் பணிபுரிந்தார்.  பஞ்சாப், அரியானா மற்றும் இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த முக்கிய வழக்குகளை புலனாய்வு செய்து அனுபவம் பெற்றவர்.

மீண்டும் தமிழக காவல்துறைக்கு திருப்பிய  மகேஷ் குமார் அகர்வால் பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்து திறம்பட பணியாற்றி வந்துள்ளார்.
சிபிசிஐடி டிஐஜி , சென்னை நகர போலீஸ் கூடுதல் கமிஷனர் (தெற்கு), மதுரை போலீஸ் கமிஷனர், மீண்டும் சிபிசிஐடி, ஐஜி உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
சிபிசிஐடி ஐஜியாக இருந்த போது சேலம் ரயில் கொள்ளை வழக்கு தொடர்பாக புலனாய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆபரேஷன்ஸ் பிரிவில் பணியமர்த்தப்பட்டார்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய,  இந்து தலைவர்கள் படுகொலை வழக்கில் 3 தீவிரவாதிகளை கைது செய்து, இந்த கொலைகளுக்கு நெட்வொர்க்காக செயல்பட்டவர்களை கூண்டோடு பிடிக்க உதவினார்.
தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய,  சிறுசேரி பெண் பொறியாளர் கொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்து, பெண்களிடையே நம்பிபையை ஏற்படுத்தினார்.
சென்னை  சென்ட்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாதிகளை கைது செய்து சாதனை படைத்தார்.

நெல்லை மாவட்ட  வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிரபல ரவுடியான பொட்டு சுரேஷ் கொலை வழக்கு உள்பட முக்கிய வழக்குகளை திறம்பட கையாண்டு நன்மதிப்பை பெற்றவர்.
மகேஷ் அகர்வாலின்  சிறப்பான காவல் பணிக்காக தமிழக அரசு, அவருக்கு முதல்வர் பதக்கம் வழங்கி சிறப்பித்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை நகரில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது சென்னை மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார்.
புதிய காவல் ஆணையாளருக்கு பத்திரிகை.காம் இணையதளம் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறது.