சென்னை
சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில் கழிவுநீரைச் சிலர் கொட்டி விட்டுச் செல்வதை எதிர்த்து பொது மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
சென்னை நகரில் உள்ள முகப்பேர் கிழக்குப் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அண்ணாநகர் மேற்கு பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் பலரும் இங்கு வசித்து வருகின்றனர். சமீப காலத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ள சென்னை நகர்ப்பகுதியில் முகப்பேர் கிழக்கு பகுதியும் ஒன்றாகும். இங்குப் பெரிய வீடுகள் முதல் மிகச் சிறிய குடியிருப்புக்கள் வரை பல வீடுகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக ஒரு சிலர் நள்ளிரவில் இந்த பகுதியில் லாரிகளில் கழிவு நீரைக் கொண்டு வந்து கொட்டி விட்டுச் சென்றுள்ளனர். இப்பகுதி முழுவதும் இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் கொசுத் தொல்லையும் தாங்கமுடியாத அளவுக்கு உள்ளது இங்குள்ள மக்கள் மாநகராட்சி அதிகாரியிடமும் இங்கு வசிக்கும் அமைச்சர் பெஞ்சமின் இடமும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
நேற்று இப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடியிருந்தோர் தங்கள் பகுதியில் தேங்கி உள்ள கழிவு நீரை அகற்றவும் இவ்வாறு கொட்டுவதை எதிர்த்தும் கோஷமிட்டனர். இதையொட்டி அங்கு வந்த காவல்துறையினர் மக்களை கலைந்து போகும்படி கேட்டுக் கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என மக்கல் தெரிவித்தனர்,
இதையொட்டி காவல்துறையினருக்கும் மக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் நீண்ட நேரப் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதி அளிக்கப்பட்ட பிறகு கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.