சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சில இடங்களில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 13 செ.மீ. மழையும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதிகளில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இளையான்குடியில் 5 செ.மீ, இரணியல், காமாட்சிபுரம், நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், திருச்சி விமான நிலையம், குடுமியான்மலை பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.