சென்னை: சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் சென்னை மெட்ரோ ரயில், 2 ம் கட்ட திட்டத்தின் பாதையில் இன்று மாலை இயக்கப்படுகிறது.
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், தினசரி பல லட்சம் பேர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கான எஞ்சின் உள்பட தேவையான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று மாலை அந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
தற்போது சென்னை மெட்ரோ பேஸ்2 திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பில், மூன்று வழிதடங்களில், மொத்தம் 118.9 கிலோமீட்டர் தொலைவிற்க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாதையில், 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.
இந்த மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 4-ஆம் வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கிலோமீட்டர் தொலைவின் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரையில் பணிகள் முடிவடைந்து ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூர் வரை மொதம் 8 கிலோமீட்டர் தொலைவு ஆகும். அதேபோல பூந்தமல்லி நெடுஞ்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூர் வரையில் மொத்தம் ஒன்பது உயர்மட்ட ரயில் நிலையங்கள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழித் தடத்தில், இந்த ஆண்டு டிசம்பரில் ரயில் இயக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர தமிழ்நாடு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் இன்று முதன்முறையாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையில் 2.5 கிலோமீட்டர் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.