சென்னை

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகச் சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் பச்சை வழித்தடத்தில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தற்காலிகமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

’பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (29.11.2023) மதியம் 1:45 மணி முதல் 2.15 மணி வரை வடபழனி, அரும்பாக்கம் மற்றும் புரட்சித்தலைவி டாக்டர். ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்காலிகமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பச்சை வழித்தடத்தில், புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமாக கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் வரை இயக்கப்படும். அதேபோல், பரங்கி மலை மற்றும் விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.

பரங்கி மலை மெட்ரோ நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் நீலவழித்தடத்தில் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று மாறி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகளை பணியாளர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். பராமரிப்பு பணிகள் வெகு விரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.

நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்குச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.