சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும் ஆள்பற்றாக்குறை காரணமாக குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் தொழிலாளர்கள் பலரும் சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய இடங்களுக்கு சென்றுவிடுவதாலும் பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலை செய்வதை விரும்புவதாலும் வெளிமாநில தொழிலாளர்களே பெருமளவில் இங்கு வேலை செய்து வருகின்றனர்.

தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ. 14,000 முதல் 15,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் நிலையில் பெரும்பாலானவர்களுக்கு மாதம் ரூ. 18,000 சம்பளமாக வழங்கப்படுகிறது.
அசாம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் இந்த தொழிலாளர்கள் குறைவான சம்பளம் மட்டுமன்றி தமிழ் மொழியும் தெரியாததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.
இதனால், குறுகிய காலம் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பணி புரிவதுடன் தீபாவளி, ஆயுதபூஜை, சாட் பூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு மொத்தமாகவும் சென்றுவிடுவதால் ஆள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளில் பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடம் 4ல் போக்குவரத்து இந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் தூண்கள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி முழுமையாக முடிந்துள்ள நிலையில் ரயில் நிலையங்கள், நடைமேடைகள், படிக்கட்டுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.
இந்தப் பணிகள் பெரும்பாலும் திறமையான தொழிலாளர்களை நம்பியே உள்ள நிலையில் இங்கு அதற்கான போதுமான தொழிலாளர்கள் இல்லையென்று கூறப்படுகிறது.
இதையடுத்து மற்ற வழித்தடங்களில் உள்ள தொழிலாளர்களை இங்கு ஈடுபடுத்தி வரும் மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன அதிகாரிகள் தற்போது இந்த பணிகளுக்காக சுமார் 5200 பேர் அதாவது தேவையான பணியாளர்களில் 90% பேரை தயார் செய்து பணிகளை மேற்கொண்டு வருவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
தவிர, மாதவரம் – சிறுசேரி இடையிலான மூன்றாவது வழித்தடத்தில் சுரங்க பணிகளை மேற்கொள்ள 20% பணியாளர் பற்றாக்குறை உள்ளதாகவும் உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிக்கு 30% பணியாளர் பற்றாக்குறை இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 6400 என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் 5350 பணியாளர்களை கொண்ட மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையிலான ஐந்தாவது வழித்தடத்தில் 30% பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள ஐந்து ரயில் நிலையங்களைக் கொண்ட போரூர் – பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தை முடிக்கவே சிரமப்பட்டு வரும் நிலையில் 2026 ஜூன் மாதம் போரூர் – கோடம்பாக்கம் இடையே போக்குவரத்தை துவக்க இலக்கு நிர்ணயித்துள்ளதால் அதிகாரிகள் பெரும் கலக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.