சென்னை

சென்னையில் பல மால்களில் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உணவு விடுதிகள் வேலை நேரத்தை குறைத்துக் கொண்டுள்ளன.

சென்னை நகரில் ஏராளமான மால்களும் உணவு விடுதிகளும் உள்ளன.   நகர் மற்றும் புறநகர்களில் மொத்தம் 8000 க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் இயங்கி வருகின்றன.    இந்த மால்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை தற்போது டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பெற்று வருகின்றன.  சென்னையில் உள்ள தண்ணீர் பஞ்சத்தினால் பல டேங்கர் லாரிகள் தண்ணீர் விநியோகத்தை நிறுத்தி உள்ளன.

இதை ஒட்டி பல புகழ்பெற்ற சென்னை மால்களில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.   தென் சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற மாலின் பணியாளர், “தற்போது சென்னை நகரின் தண்ணீர் பஞ்சத்தினால் நாங்கள் குழாயில் வரும் நீரின் அளவை மூன்றில் ஒரு பங்காக குறைத்துள்ள்ளோம்.  முன்பு நிமிடத்துக்கு 7.5 லிட்டர் வந்துக் கொண்டிருந்த குழாய்களில் தற்போது 2.5 லிட்டர் மட்டுமே வரும்” என தெரிவித்துள்ளார்.

பல உணவு விடுதிகள் தாமதமாக திறக்கப்பட்டு விரைவில் மூடப்படுகின்றன.  அது மட்டுமின்றி ஒரு சில உணவகங்களில்  பகல் சாப்பாடு பிரிவு மூடப்பட்டுள்ளது.    தொடர் உணவகம் ஒன்றின் வேளச்சேரி மேலாளர், “கடந்த பத்து நாட்களாக எங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன.  எனவே மதிய உணவு பிரிவை நாங்கள் மூடி விட்டோம்” என தெரிவித்துள்ளார்.

சென்னை உணவு விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி, “டேங்கர் லாரிகள் தண்ணீர் விலையை மும்மடங்காக உயர்த்தி உள்ளனர்.  முன்பு ரூ.3000 க்கு நாங்கள் 36000 லிட்டர் தண்ணீரை வாங்கி வந்தோம்.  தற்போது விலை உயர்வால் நாங்கள் தூக்கி எறியக்கூடிய கப்புகளையும் தட்டுகளையும் மட்டுமே பயன்படுத்துகிறோம்” எனதெரிவித்துள்ளார்.