சென்னை
கானாத்தூரில் இரவு பார்ட்டி நடத்திய நடிகை மீது வழக்குப் பதியப்பட்டு அந்த விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கொரொனா பரவல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. ஆயினும் மாநிலத்தின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.
தற்போது கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயினும் இரவு நேர விருந்து கேளிக்கைகள், உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை கானாத்தூரில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் இரவு நேர விருந்து கொண்டாட்டம் ஒன்று நடந்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த கொண்டாட்டத்தை நடிகை கவிதா ஸ்ரீ ஏற்பாடு செய்துள்ளனர். இதில் 15 ஆண்களும் 11 பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதையொட்டி காவல்துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது. அதையொட்டி காவல்துறை நடிகை கவிதா ஸ்ரீ உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளது. அத்துடன் கொண்டாட்டம் நடந்த தனியார் சொகுசு விடுதிக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.