சென்னை: சென்னையில் மிக விரைவில் உணவு தானிய பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிகிறது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததன் காரணமாக, கோயம்பேடு மொதத உணவு தானியங்கள் வளாகம், கொத்தவால்சாவடி மார்க்கெட் ஆகியவை மே 6ம் தேதி முதல் மூடப்பட்டன. ஆகையால் நகரில் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் பற்றாக்குறை ஏற்படும்.
இது குறித்து, சென்னை கோயம்பேடு உணவு தானியங்கள் மொத்த வணிகர்கள் சங்க செயலாளர் ஆர்.பண்ணையப்பன் கூறியதாவது: அச்சாரப்பன் தெருவானது சென்னை நகருக்கு மட்டுமல்ல, பிற மாவட்டங்களில் பருப்பு வகைகளை விநியோகிக்கும் ஒரு முக்கிய விநியோக மையமாகும்.
இப்போது கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. ஆகவே அதன் தட்டுப்பாடு அதிகரிக்கலாம். இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கோயம்பேடு மொத்த உணவு தானிய வளாகத்தில் சென்னைக்கு பூண்டு சப்ளை செய்யும் கடைகள் உள்ளன. அவையும் அடைக்கப்பட்டு உள்ளதால் விலைகள் உயரக்கூடும் என்றார்.
தற்போதைய நிலைமையில் எந்தவித மாற்றமும் இல்லை. மே மாத இறுதிக்குள் மளிகை கடைகள் மற்றும் வீடுகளில் பொருட்கள் குறைந்து வரும் போது இந்த பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு பருப்பு வணிகர்கள் சங்க உறுப்பினர் டி.சண்முககனி தெரிவித்தார்.