சென்னை: டிரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் முறையில் 90% பயன் கிடைத்துள்ளது, இதன்மூலம் நீர்நிலைகளில் உருவாகும் கொசப்புழுக்கள் 90% அழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளது.

சென்னையில் அதிகரிவரும் கொசுத்தொல்லைக்கு, சென்னையினுள் செல்லும் கால்வாய்கள், சாக்கடைகளே காரணம். இவை சரியான முறையில் சுத்தப்படாததால், நீர் தேங்கி, கொசுக்கள் அதிகஅளவில் உருவாகி  வருகிறது. இதனால் மக்களுக்கு டெங்கு உள்பட பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இதை தடுக்கும் நோக்கில், சென்னையில் உள்ள நீா்நிலைகள் மற்றும் கால்வாய்களில் டிரோன் மூலம் சோதனை அடிப்படையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது

அதன்படி,  பணியாளா்களின் பாதுகாப்பு நலன் கருதியும் மனித ஆற்றல் பயன்படுத்தப்படுவதை தவிா்க்கவும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சாா்பில், நீா்வழித்தடங்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிரோன்கள் மூலம்  மருந்து தெளிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் AVIONICS துறையுடன் இணைந்து, நீர்வழித்தடங்களில் உள்ள கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்கள் ஆகியவற்றை அழிக்க சோதனை முறையில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செயதார். அதைத்தொடர்ந்து  நீா்வழித் தடங்களில் உள்ள கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்கள் ஆகியவற்றை அழிக்க சோதனை முறையில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக 15 நாட்கள் சோதனை முயற்சியில் மருந்து தெளிக்கப்பட்டது.

முதல்கட்டமாக க்கிங்ஹாம், கொடுங்கையூா், வியாசா்பாடி, கேப்டன் காட்டன், கூவம், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், அடையாறு, வீராங்கல் ஓடை மற்றும் மாம்பலம் ஆகிய கால்வாய்களில் சுமாா் 140 கி.மீ. நீளத்துக்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது. மருந்து தெளிக்கப்படும் நாளுக்கு முன்னதாக கொசுப்புழு அடா்த்தி அளவு கணக்கிடப்பட்டு, மருந்து தெளித்த 24 மணி நேரத்துக்குப் பிறகு அதே இடத்தில் கொசுப்புழு அடா்த்தி மீண்டும் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. இதன் முடிவு வியக்க வைக்கும் அளவில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருந்து தெளிப்பதற்கு முன்பு  தேனாம்பேட்டை மற்றும் வளசரவாக்கம் போன்ற மண்டலங்களில் லார்வா அடர்த்தி அதிகபட்சமாக இருந்ததாகவும், மருந்து தெளித்த 24 மணி நேரத்திற்கு பின்பு அவ வெகுவாக குறைந்துள்ளது, அதாவது 90சதவிகிதம் கொசு புழுக்கள் (லார்வா) அழிக்கப்பட்டு இருப்பது  ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்த சென்னை மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது.

இது தொழிலாளர் செலவு உள்ளிட்ட செலவுகளைக் குறைக்கும் என்றும், அதற்காகும் செலவினங்களை மற்ற தேவைக்கு பயன்படுத்தலாம் என்றும் கூறும் அதிகாரிகள், இந்தா டிரோன் மருந்து தெளிக்க ( MLO)  மாதம் ரூ. 22 லட்சம் செலவாகும் என்று கூறும் அதிகாரிகள், இது மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.