சென்னை

சென்னையில் கூட்டு முயற்சியில் உருவாக்கப்படும் கட்டுமானப் பணிகள் முடக்கத்தால் நில உரிமையாளர்கள் கடும் துயரத்தில் தவித்து வருகின்றனர்.

சென்னையில் தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகளில் 80%க்கும் மேல் அடுக்குமாடிக் குடியிருப்புக்களாக உள்ளன.   இவை அனைத்துமே கூட்டும் முயற்சியாக உருவாக்கப்படுகின்றன.  அதாவது நில உரிமையாளர்களும் கட்டுமான உரிமையாளர்களும் இணைந்து இவற்றை உருவாக்குகின்றனர்.   இவை 40 : 60 என்னும் விகிதத்தில் ஒப்பந்தம் செய்யப்படுகின்றன.

அதாவது மொத்தம் கட்டப்பட்ட குடியிருப்புக்களில் 40% வீடுகள் நில உரிமையாளருக்கும் 60% வீடுகள் கட்டுமான உரிமையாளருக்கும் ஒதுக்கப்படுகின்றன.  நிலங்களின் மதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நில உரிமையாளருக்கு அதிக வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.  இந்த முறையில் கட்டுமான உரிமையாளர்கள் நிலத்துக்கான முதலீடு செய்யத் தேவை இருப்பதில்லை   மாறாக நில உரிமையாளர்கள் தங்க வீட்டு வாடகைக்காகப் பணம் மட்டும் அளிக்கின்றனர்,

ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாகப் பல கட்டுமான பணிகள் முடங்கி உள்ளன.  இதனால் நில உரிமையாளர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.   தற்போது கட்டுமானப் பணிகள் எப்போது முடியும் என்பது தெரியாததால் இவர்கள் மேலும் வாடகை அளிக்க வேண்டி உள்ளது.  இதில் குறிப்பாக மாத ஊதியம் பெறுவோர், மூத்த குடிமக்கள் ஆகியோர் கடும் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இதையொட்டி பல நில உரிமையாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வேண்டி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதைப் போல் கட்டுமான உரிமையாளர்களும் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.   இதில் ஒரே கட்டுமானம் மட்டும் நடத்துவோருக்கு ஏற்படும் துயரத்தை விட அதிகம் கட்டுமானம் நடத்துவோருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.