சென்னை: கோயம்பேடு காய்கறி அங்காடி செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து சென்ற பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து சந்தை மூடப்பட்டது. பின்னர் தற்காலிகமாக காய்கறி சந்தை திருமழிசையில் செயல்பட்டு வருகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை கோயம்பேடு காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் வியாபார்கள் சங்கத்தினரிடம் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்தே, கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக செப்டம்பர் 18ம் தேதி முதல் கோயம்பேடு சந்தை தானிய அங்காடி திறக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.