சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கோரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கத்தில் 100 படுக்கைகள் கொண்ட ‘கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 15,98,216 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில்,  6,247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 4,38,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும்  60 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை 5,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 3,85,297 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். தற்போது  47,330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காத நிலையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 பேருக்கான ஆக்சிஜன் படுக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், பல பகுதிகளில் உள்ள கல்லூரிகள் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் ஈஞ்சம்பாக்கத்திலும்,விருகம்பாக்கத்தில் 100 படுக்கைகளும் கொண்ட ‘கொரோனா சிகிச்சை மையங்கள்’ நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.தெரிவித்துள்ளார்.