சென்னை,
பாரம்பர்ய இசை பங்களிப்புக்காக யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது. இதற்கு பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் ஆகியோர் தமிழக மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், கேஸ்ட்ரானமி (உணவைத் தேர்ந்தெடுத்தல், சமைத்தல் மற்றும் உண்ணுதல்), இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்யும் நகரங்களை கிரியேட்டிவ் சிட்டீஸ் (Creative Cities) என்ற அடைமொழியுடன் அங்கீகாரம் அளிக்கும்.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்களை இந்தப் பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அமைப்பு ஊக்கப்படுத்தி வருகிறது.
அதன்படி, பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில் படைப்பாக்க நகரம் ( கிரியேட்டிவ் சிட்டீஸ்) பட்டியலில் சென்னையையும் யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது.
இந்தாண்டில் சென்னையுடன் சேர்த்து நகர வடிவமைப்புக்காகத் துபாய், இலக்கியத்துக்காகத் தென்னாப்பிரிக்காவின் டர்பன் உள்ளிட்ட 64 நகரங்கள் யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளன.
இந்தப் புதிய நகரங்களுடன் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 72 நாடுகளைச் சேர்ந்த 180 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை பிரிவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பாரம்பர்ய இசைக்காக வாரணாசி உள்ளிட்ட இந்திய நகரங்கள் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
யுனெஸ்கோ அமைப்பின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் பாரம்பரிய இசைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதற்காகவே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
பிரதமர் மோடி
‘பாரம்பரிய இசைப் பங்களிப்புக்காக யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றதற்காகச் சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்துள்ள பங்களிப்பு விலைமதிப்பற்றது. இது நமது நாடே பெருமைகொள்ளும் தருணம்’ என்று கூறியுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால்
மிக உயர்ந்த இசை பாரம்பரியம் கொண்ட சென்னை தற்போது யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பில் இணைந்துள்ளது சென்னை வாழ் மக்களுக்கு பெருமைக்குரிய தருணம். சென்னை நமது உயர்ந்த கலாசாரம், பாரம்பரியம், கர்னாடக இசை, தொன்மையான நடனம், நாடகம் மற்றும் கலையை வளர்ப்பதுடன், தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையையும் வலுப்படுத்துகிறது.
தமிழக ஆளுநராக சென்னையில் வசித்து வரும் நான், அனைத்து கலைஞர்களுக்கும், சபாக்களுக்கும், கலை வல்லுநர்கள், ரசிகர்கள் மற்றும் சென்னை மக்களுக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.