சென்னை:
ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.
தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது புத்தாடைகளும், பட்டாசுகளும்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக பட்டாசு வெடித்து காலங்காலமாக தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர் மக்கள்.
தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வெவ்வேறு பெயர்களில் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அனைத்து பகுதி கொண்டாட்டங் களிலும் பட்டாசுகள் வெடிப்பதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகில், பட்டாசுகளும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பல்வேறு ஆன்லைன் விற்பனை தளங்கள் பட்டாசுகளை போட்டி போட்டு விற்று கோடிகளில் லாபங்களை அள்ளிய நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு ஆன்லைன் பட்டாசுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதுபோல சென்னை உயர்நீதி மன்றமும் ஆன்லைன் பட்டாசுக்கு தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் தடையை மீறி ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஷேக் அப்துல்லா என்பவர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தவில்லை எனக் கூறி, வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை துணைத்தலைவர் சஞ்சனா சர்மா, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி சட்ட விரோதமாக ஆன்லைனில் பட்டாசு விற்பனைகள் துவங்கி விட்டதால், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சைபர் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார்.
மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்பது தண்டனை விதிக்கப்படும் என விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.