சென்னை:

குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள், அதிக பணம் செலவழித்து வெளிநாடுகளில் எப்படி மருத்துவப் படிப்பில் சேரமுடிகிறது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தாமரைச் செல்வன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,

“மேற்கிந்தியத்தீவுகளில் மருத்துவம் படித்து இந்தியாவில் மருத்துவராக பணிபுரிவதற்குத் தேவை யான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன்.  தமிழகத்தில் மருத்துவராக பயிற்சி பெற விண்ணப்பித்தேன். ஆனால் எனது விண்ணப்பத்தை தமிழக மருத்துவ கவுன்சில் பரிசீலிக்க வில்லை. இதனால் என்னால் மருத்துவராக பணியாற்ற முடியவில்லை. எனது விண்ப்பத்தை தமிழக மருத்துவ கவுன்சில் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்” என்று தெரிவித்தி ருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

தமிழக மருத்துவ கவுன்சிலு்ககு மனுதாரர் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அதைப் பரிசீலித்து தமிழக மருத்துவ கவுன்சில்  இரு வாரங்களுக்குள் தகுந்த முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 90 சதவிகிதத்துக்கு குறைவாக மதிப்பெண் எடுத்தால் மருத்துவம் படிக்க முடிய வில்லை. ஆனால் மனுதாரர் 77.8 சதவிகிதம் மதிப்பெண் மட்டுமே எடுத்துவிட்டு வெளிநாட்டில் மருத்துவம் படித்திருக்கிறார்.

குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் அதிக பணம் செலவழித்து வெளிநாடுகளில் எப்படி மருத்துவம் படிக்க முடிகிறது?

குறைந்த மதிப்பெண் எடுத்து வெளிநாடுகளில் பணத்தை செலவழித்து மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் ஒரே ஒரு தகுதித் தேர்வை மட்டும் எழுதிவிட்டு மருத்துவர்களாகப் பணிபுரி கின்றனர்.  குறைந்த மதிப்பெண் எடுத்து வெளிநாடுகளில் மருத்துவர்களானவர்களையும் அதிக மதிப்பெண்களுடன் இந்தியாவில் மருத்துவம் படித்த மருத்துவர்களையும் அரசும் சமூகமும் ஒரே அளவுகோலுடன் பார்க்கிறது.

வெளிநாடுகளில் பணத்தை வாரியிறைத்து மருத்துவர்களானவர்கள் மூலமாக இந்திய மக்களின் உயிரோடு மத்திய மாநில அரசுகள் விளையாடக்கூடாது.

இந்தியாவிற்கு அதிகமான மருத்துவர்கள் தேவை என்ற போதிலும் அவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். மருத்துவத்தை ஒருபோதும் வணிகமாக்கி விடக்கூடாது.

ஆகவே கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் எத்தனை பேர் தகுதித் தேர்வு எழுதியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் இந்தியாவில் மருத்துவர்களாக பணிபுரிகின்றனர்?

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் இதுபோல அதிக பணம் செலவழித்து வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வருவது மத்திய மாநில அரசுகளுக்குத் தெரியாதா? தகுதியில்லாதவர்களைக் கொண்டு பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது பொதுநலனுக்கு விரோதமாக இல்லையா?

இந்தியாவிற்கு எத்தனை மருத்துவர்கள் உள்ளனர்? இன்னும் எத்தனை மருத்துவர்கள் தேவை? என்பன உள்ளிட்ட 14 கேள்விகளுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டு டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தர விட்டார்.  வழக்கு விசாரணை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.