மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வீடியோ வெளியிட்ட உ.பி. மாநில பாஜக நிர்வாகியான வழக்கறிஞர் பிரசாந்த் உம்ராவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழகஅரசும், டிஜிபியும் வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என்று கூறியதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். மேலும் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து, பல வழக்குகள் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும், பிரசாந்த் உம்ராவை கைது செய்ய திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  பிரசாந்த் உம்ரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வு, ‘இந்த விவகாரத்தில் பிரசாந்த் உம்ராவுக்கு 12 வார காலம் இடைக்கால முன்ஜாமீன் வழங்க முடியாது, ஆனால் 12 நாட்கள் முன்ஜாமின் வழங்குவதாக கூறியதுடன், ஜாமின் கோரி தமிழ்நாட்டின் நீதிமன்றத்தில் அதாவது மார்ச் 20ம் தேதிக்குள் மனுத்தாக்கல் செய்து பெற வேண்டும் என உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, பாஜ நிர்வாகி பிரசாந்த் உம்ரா உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இளந்திரேயன் முன்பு ஆஜரானார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று இது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலேயேயும் ஒரு பதற்றமான சூழல் நிலவியது. எனவே இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். முன்ஜாமீன் வழங்கக் கூடாது,’ என வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இது போன்ற வீடியோக்கள் பதிவு செய்வதை பார்க்கும் போது, தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் போலி வீடியோவால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்ட-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது போன்ற பதற்றமான சூழல் நிலவுகிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தார்.

மேலும் இந்த மனு குறித்து காவல்துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்