சென்னை: ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (ஜனவரி 10) போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு தடை விதிக்ககோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  மின்வாரிய  ஊழியர்கள்  அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 ஊதிய ஒப்பந்தம் குறித்தும்,  காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வலியுறுத்தியும்,  மின்வாரிய ஊழியர்கள்  தமிழகஅரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.  மாநில அரசை கண்டிக்கும் வகையில் அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், மாநில அரசு கண்டுகொள்ளாத நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கப்போவதாக எச்சரித்து உள்ளனர்.   ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.  வேலை நிறுத்தத்தின் அவசரத்தை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி ஆயத்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில்,  மின்வாரிய ஊழியர்களின்  வேலைநிறுத்த அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, தமிழக அரசி சார்பில் வாதிடுகையில், ‘ மின்சார ஊழியர்கள் போராட்டம் அறிவிக்க வேண்டும் என்றால் 6 வாரத்திற்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பி வைக்க வேண்டும்.‘ என்று வாதிடப்பட்டது.

மேலும், மின்சார ஊழியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அது அத்தியாவசிய பாதிப்பாக மாறிவிடும். பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுவர் என வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை ஏற்று, மின்சார ஊழியர்கள் நாளை முதல் அறிவித்துள்ள போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உதிய உயர்வு ஒப்பந்தம் வலியுறுத்தி ஜனவரி 10ந்தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்!