சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, பாஜக சார்பில் தேசியக் கொடியை ஏந்தி வாகன பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் அக்கட்சியினர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி மனு அளித்தனர். இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
இதை எதிர்த்து பாஜக கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணபிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், “குறுகலான சாலை மற்றும் மேம்பால கட்டுமான பணி ஆகியவற்றை காரணமாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “யார் வேண்டுமானலும் தேசியக் கொடி ஏந்தி செல்லலாம். அவ்வாறு செல்லும்போது எந்ததெந்த இடங்களில் பேரணி செல்கிறார்கள் என்பது தொடர்பான விவரங்களை காவல் துறை அறிந்து, வாகன நெரிசல் மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பேரணிக்கு அனுமதி மறுக்க முடியாது” எனக் கூறினார்.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஆக.14) தள்ளிவைத்தார். அதனப்டி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையை தொடர்ந்து, ; சுதந்திர தினத்தையொட்டி பாஜக இருசக்கர வாகன பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தேசியக் கொடியை ஏந்திச் செல்வதை தடுக்கக் கூடாது என காவல்துறை இயக்குநர் அறிவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
“தேசியக் கொடியை எடுத்துச் செல்வோர் அதன் கண்ணியம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலையை தெரிவித்து அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.