சென்னை: கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பாதுகாப்பானது அல்ல என அறிவிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிப் ரியாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவின் புனேயில் உள்ள சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டனைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து கோவிஷீல்ட் என்ற தடுப்பு மருந்தை உற்பத்தி செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டேன். 10 நாட்களுக்கு பின் தலைவலி, தொடர் தூக்கம் போன்ற பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு, 16 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
இந்த மருந்து சோதனை நடவடிக்கையில் கலந்து கொண்ட தனக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டது. எனவே கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை பாதுகாப்பானது அல்ல என அறிவிக்க வேண்டும். மேலும் தமக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், மத்திய சுகாதாரத் துறை, மருந்து கட்டுப்பாட்டாளர் ஆகியோர் மார்ச் 26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையையும் ஒத்தி வைத்தார்.