சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட காரணத்தால், உடல்நிலைப் பாதிக்கப்பட்டு தனது கணவர் மரணமடைந்துவிட்டார் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முறையான பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.

துப்புரவுத் தொழிலாளியான என் கணவர், விருப்பமில்லாத நிலையிலும், பணி பறிபோய்விடும் என்று நிர்வாகத்தினரின் மிரட்டலால், வேறுவழியின்றி கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். அதன்பிறகு, அவரது உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

பரிசோதனைக்காக, மதுரை செல்லும் வழியில், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் விழுந்து இறந்துவிட்டார். எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில், அம்பிகா என்ற கூலித்தொழிலாளி வழக்குத் தொடர்ந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரேத பரிசோதனை அறுவை சிகிச்சை நிபுணர், நோயியல் நிபுணர் மற்றும் தடயவியல் நிபுணர் ஆகியோரின் முன்னிலையில், இறந்துபோன நபருக்கு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

அதாவது, அப்படி முறைப்படியான பரிசோதனை, இதற்கு முன்னர் நடத்தப்படவில்லை என்றால், மேற்கூறிய நடைமுறையில் மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.