சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையா் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில்கள் சீரமைப்பு, புராதன ஓவியங்களைப் பாதுகாத்தல் தொடா்பான வழக்கில், சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றும் படி சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், இதை இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வந்தது.
இதையடுத்து, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோந்த ரங்கராஜன் நரசிம்மன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் நடைபெற்றது.
அப்போது மனுதாரா் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள புராதன ஓவியங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் புகைப்படங்கள் சமா்பிக்கப்பட்டுள்ளன. கோயில்கள் சீரமைப்பு, ஓவியங்களைப் பாதுகாப்பது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை இந்து சமய அறநிலையத்துறை சரிவர செயல்படுத்தவில்லை என வாதிட்டாா்.
இதைப்பதிவு செய்த நீதிபதிகள், இவ்வழக்குகளில் இந்து சமய அறிநிலையத்துறை ஆணையா் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை நவம்பா் 1 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.