சென்னை: மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.  மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்  கோபிநாத் என்ற சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஜக பிரமுகர் கல்யாணராமன் டிவிட்டர் பக்கத்தில் மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பதிவிடுவதாக புகார் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில்,   ‘சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கும் கல்யாணராமன்(55) என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெவ்வேறுமதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும், மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும்,  தொடர்ந்து வன்முறை தூண்டுதல், மத மோதல்களை உருவாக்குவது தொடர்பான கருத்துகளை கூறி வந்ததால் அவரது பக்கத்தை முடக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்துக்கு தமிழக காவல்துறை பரிந்துரை அனுப்பியது. இதையடுத்து அவரது டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக விசாரித்துவந்த காவல்துறையினர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான உள்ள  கல்யாணராமன், கடந்த 2 மாதங்களில் மட்டும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக 18 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்ததுடன், அவரை   சட்டத்தில் சிறையில் அடைக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.  அதன்படி, கல்யாணராமன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.