சென்னை: பசுமைத்தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளளது.
ஓய்வுபெற்ற தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனுக்கு சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தெற்கு மண்டல உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவு கடந்த 5ந்தேதி என்ஜிடியின் முதன்மை அமர்வால் அறிவிக்கப்பட்டது. இந்த பதவியில் கிரிஜா 4 ஆண்டுகள் பணியாற்றுவார் என்றும் கூறப்பபட்டது.
ஏற்கனவே, என்ஜிடியின் தெற்கு மண்டல பெஞ்சில் பணியாற்றிய நிபுணர் உறுப்பினர் சைபல் தாஸ்குப்தா, கொல்கத்தாவில் உள்ள கிழக்கு மண்டல பெஞ்சிற்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே அவருக்கு பதில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கிரிஜா வரும் 19ம் தேதி பதவியேற்க தயாராக இருந்தார். ஆனால், கிரிஜிவின் நியமனம் சர்ச்சைக்குள்ளானது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக அமர்விற்கு துறைசார் நிபுண உறுப்பினராக, தமிழக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை நியமித்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது. ‘’பசுமை தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் சூழலியல் துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றி இருக்கவேண்டும், ஆனால் கிரிஜாவிற்கு அந்த அனுபவம் கிடையாது என தெரிவித்து உள்ளது.
இந்த வழக்கு இன்று தலைமைநீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்ததுடன், கிரிஜாவின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.