சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆளுநருக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கூறிஉள்ளதுடன்,  குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோர் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவி இரட்டை ஆதாயம் பெறும் பதவியில் இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டில், மாநில ஆளுநருக்கும், ஆளும் திமுகஅரசுக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. திமுகஅரசு அனுப்பும் நீட் உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால், கோபமடைந்துள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மேலும், மத்தியஅரசின் புதிய கல்விக்கொள்கை உள்பட பல்வேறு விஷயங்களில் ஆளுநருக்கும், தமிழகஅரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில்,  தந்தை பெரியார் திராவிட கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிர், தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுவையில் உள்ள ஆரோவில் அறக்கட்டளை அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக லாபம் தரக்கூடிய பொறுப்பில் உள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி இரட்டை ஆதாயம் பெறுவதாகக் கூறி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு  விசாரணைக்கு உகந்ததா இல்லை என்பது குறித்து பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி இ.பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று விசாரித்தது. இதையடுத்து, மனுதாரரின் கேள்விக்கு  ஆளுநர், பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோர் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கொல்கத்தா உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல முறை சுட்டிகாட்டிய தீர்ப்பை குறிப்பிட்டு இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும், மேலும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கு தொடர முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து  தீர்ப்பளித்துள்ளனர்.