சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என ஓசூர் ஜெயச்சந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி யுள்ளது.
அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 7ந்தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற்றது. இதற்கு தடை விதிக்கக்கோரி ஓசூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் அமர்வு, அதிமுக உட்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு? என்றும், எதுவுமே இல்லாமல் தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் சேர்த்ததால் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என ஆராய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியதுடன், தேர்தலுக்கு தடை விதிக்கவும் மறுத்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீதீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது..
அதன்படி, அதிமுக உட்கட்சி தேர்தலில் தலையிட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்றும், மேலும்,இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறி இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.