சென்னை:  ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட  சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இந்த படத்தை பிரபல சன் டிவி நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அதன் விநியோக உரிமையை  உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளதால், படத்தை தியேட்டர்களில் காண ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து, அண்ணாத்த படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்கக்கோரி தயாரிப்பு நிறுவனமான சன்நெட்வொர்க் வழக்கு தொடர்ந்திருந்தது. இநத் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அண்ணாத்த திரைப்படத்தை இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

‘சிறுத்தை’ சிவா இயக்கும் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, வேலராம மூர்த்தி, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். படம் நவம்பர் 4 ஆம் தேதி, தீபாவளி அன்று வெளியாகிறது.