சென்னை,
கொடுங்கையூரில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் பாய்ந்து இரு சிறுமிகள் பலியானது குறித்து முழு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர்.நகரில், மழைநீரில் கிடந்த மின்வயர்களிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதால், அந்த தண்ணீரை மிதித்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர்.
மின்சார வாரியம் சரிவர பராமரிக்கப்படாமல் வயர்கள் வெளியே கிடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பல முறை புகார் குறித்தும் நடவடிக்கை எடுக்காமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் செய்ததன் காரணமாகவே இன்று இரு சிறுமிகள் பலியாகி உள்ளனர்.
இதை பொதுமக்களிடையே அரசு மற்றும் மின்சார வாரியம் கடும் எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், கவனக்குறைவாக இருந்த மின்துறை அதிகாரிகள் 3 பேர் உட்பட எட்டு மின்துறை ஊழியர்களை மின்துறை வாரியம் உடனடியாக சஸ்பென்ட் செய்தது. மேலும் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு தருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்று மின் விபத்துகள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும், மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை அறிவிக்கப் பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மின்வாரியத் துறையைச் சேர்ந்த 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.