சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் ஒரே நேரத்தில் 33% ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் பல அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கி உள்ளன.   அவ்வகையில் சென்னை உயர்நீதிமன்றம் இயங்கத் தொடங்கி உள்ளது. ஒரே நேரத்தில் 33% ஊழியர்களுக்கு மட்டுமே பணி புரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணி புரிய அனுமதிக்கப்பட உள்ளனர்.

நேற்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அந்த அறிவிப்பில், “அனைத்து நீதிமன்ற ஊழியர்களும் ஆன்லைன் மூலம் சுய விவரங்களைத் தினமும் அளிக்க வேண்டும்.  அதில் அவர்கள் எப்போதும் முக கவசம் அணிவோம் எனவும் அடிக்கடி கை கழுவுதல் மற்றும் சானிடைசர் பயன்படுத்துவதை  உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன் அவர்களுக்கு ஜுரம், ஜலதோஷம், மூச்சுத் திணறல் போன்றவை இல்லை என்பதையும் உறுதி செய வேண்டும்.  அது மட்டுமின்றி தாங்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் இல்லை என்பதையும் அவர்கள் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

இந்த விவரத்தை அளிப்போருக்கு மட்டுமே வருகை பதிவேட்டில் பதிய அனுமதி அளிக்கப்படும்   அத்துடன் அனைவரும்  அடையாள அட்டையை அவசியம் எடுத்து வர வேண்டும்.    பின்னால் எப்போதாவது ஊழியருக்கு அல்லது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகும் பணி புரிந்தது தெரிய வந்தால் அவர்கள் மீது துறை சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழியரின் குடும்பத்தினர் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால் அவர்களுக்குத் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதால் அவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டு தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு இது குறித்து பதிவாளருக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.