சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை இல்லை என அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 9 ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள ‘சாம்சங்’ நிறுவன தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

போராட்டத் திடல்களில் இருந்த பந்தல்களை பிரித்ததால் அதே இடத்தில் அமர்ந்து கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துரையினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 5-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் சொந்த பிணையில் அவர்கல் விடுவிக்கப்பட்டனர்.

சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டு சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.காவல்துறை தொடர் போராட்டத்தில் கைதான தொழிலாளர்கள் யாரும் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்படவில்லை என்று பதிலளிக்கத்தது. இந்நிலையில் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.