சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம்  பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

போக்குவரத்துத்துறை ஆணையர் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்துதான் தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில்   வழக்கு தொடர்ந்திருந்தனர். நேற்று இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் கோயம்பேட்டில் உள்ள தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்திவைக்க அனுமதிக்க வேண்டும் எனவும், மீண்டும் கிளாம்பாக்கத்திற்கு செல்லும்போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கோயம்பேட்டில் பேருந்துகளை நிறுத்திவைக்க அனுமதிக்கப்படும் எனவும், மற்ற கோரிக்கைகளைப் பொறுத்தவரை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்

இந்த விவகாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அதோடு, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குத் தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, எந்த திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார்.