சென்னை
சென்னை மெட்ரோ ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உடனடியாக இணைய வரைபடத்தில் தரவேற்றச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் மாதவரம் பால் பண்ணை முதல் முராரி மருத்துவமனை வரையிலிருந்த தூரத்தில் இடையில் தபால் பெட்டி ரயில் நிலையம் அமைக்கப்படுவதாக இருந்தது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டு வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இரு ரயில் நிலையங்களுக்கு இடையே ஆன தூரம் மிகவும் குறைவாக இருந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி லூர்து ராஜ் என்பவர் ஒரு தன்னார்வ மனுவைத் தாக்கல் செய்து முதலில் குறிப்பிட்டபடி தபால் பெட்டி ரயில் நிலையத்தை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவில் தற்போது இரு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே ஆன தூரம் சுமார் 700 முதல் 900 மீட்டர் உள்ள நிலையில் இந்த மாறுதலால் மாதவரம் பால் பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை இடையில் ஆன தூரம் 1.7 கிமீ ஆகி விடும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் அமர்வு இந்த மனு முந்தைய 2018 ஆம் வருட வரைபடத்தின் அடிப்படையில் போடப்பட்டுள்ளதைக் கண்டறிந்தது. தற்போதைய வரைபடத்தின்படி இந்த இரு நிலையங்களுக்கான தூரம் வெறும் 896.77 மீட்டார்கள் மட்டுமே ஆகும்.
இந்த புதிய வரைபடம் வெளியிடாததால் மனுதாரருக்குக் குழப்பம் ஏற்பட்டதை நீதிபதிகள் புரிந்து கொண்டனர். இதன் அடிப்படையில் புதிய வரைபடத்தை 24 மணி நேரத்துக்குள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது இணைய தளத்தில் தரவேற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.