சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் கோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு நடத்த அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டுமென, கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

கோடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கடந்த 2008-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இதை  எதிர்த்து பஞ்சாயத்து தலைவர் சார்பில் அள்க்கப்பட்ட மேல்முறையீடு மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.  அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கோடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்பதாகவும், 2008-ம் ஆண்டிலிருந்து கோடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது? எனவும் ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் இதை கடுமையாக எதிர்த்தார எஸ்டேட்டை ஆய்வு செய்யவும், சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளதாகக் கூறி, உரிய விதிமுறைகளை பின்பற்றி ஆய்வு செய்யலாம் என அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டுமெனவும், அங்கிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.