சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கோரிய வழக்கறிஞருக்கு பொது நல வழக்கு தொடர ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆறாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.   இவர்கள் பிரசாரம் செய்வதால் மேலும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர் பால்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்தார்.  அதில் அவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குழந்தைகளை முத்தமிடுவதாலும் முதியோரைக் கட்டிப் பிடிப்பதாலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என கூறி உள்ளார்.

மேலும் தமிழகத் தேர்தலில் போட்டியிடும் 4512 வேட்பாளர்களுக்கு கொரோன பரிசோதனை கட்டாயமாகச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தியின் அமர்வின் கீழ் விசாரணை செய்யப்பட்டது.

இந்த வழக்கு உள்நோக்கத்துடன் அற்ப காரணங்களுக்காகப் பதியப்பட்டுள்ளதாக கூறிய அமர்வு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.  அத்துடன் இது போலத் தேவையற்ற வழக்கு மனுத் தாக்கல் செய்வதற்காக வழக்கறிஞர் பால்ராஜுக்கு கண்டனம் தெரிவித்து அவர் இன்னும் ஓராண்டுக்குப் பொதுநல வழக்கு தொடர தடை விதித்துள்ளது.