சென்னை

வைகோ மற்றும் திருமாவளவன் மீதான காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  முற்றுகை போராட்டம் நடத்தினர்  இவர்கள் இருவரும்  அனுமதியின்றி போராட்டம் நடத்தி உள்ளனர்.  எனவே இவர்கள் இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

சட்ட விரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான  விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.  இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்,

இந்த மனு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.  விசாரணை முடிவில் நீதிபதி இந்த வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதையொட்டி மதிமுக பொதுச் செயலர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.