சென்னை
தலித் மக்களுக்குச் சம உரிமை வழங்கும் போது தனி சுடுகாடு எதற்காக என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்குக் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று வேலூர் மாவட்டம் வானியம்பாடிஅருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்த தலித் வகுப்பைச் சார்ந்த குப்புசாமி என்னவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். அந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் தலித் பிணங்கள் எரியூட்டத் தடை உள்ளது. மேலும் தலித்துக்களுக்கு என தனிச் சுடுகாடு இல்லாததால் பாலாற்றங்கரையில் எரிப்பது வழக்கமாக உள்ளது. அந்த ஆற்றுக்குச் செல்லும் பாதையில் தலித்துக்கள் செல்ல தடை உள்ளதால் பிணத்தைக் கயிற்றைக் கட்டி பாலம் வழியே இறக்கி எரிப்பது வழக்கம் ஆகும்.
அவ்வாறு குப்புசாமியின் உடலும் கயிறு கட்டி இறக்கப்பட்டு எரியூட்டப்பட்டது. இந்த தகவல் அறிந்த சென்னை உயர்நீதி மன்றம் சுவோ மோட்டோ முறையில் ஒரு பொது நல மனு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த மனுவை நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோரின் அமர்வு விசாரணை செய்து வருகிறது. இந்த அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.
விசாரணையின் போது அமர்வு, “அரசியலமைப்பு சட்டம் விதி எண் 14 இன் படி அனைத்து மக்களும் சமம் என உள்ளது. அனைவரும் கோவில், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் நுழையலாம் எனச் சட்டம் உரிமை அளித்துள்ளது. அப்படி இருக்க இந்துக்களில் ஒரு பிரிவினரான தலித்துக்களுக்கு ஏன் இந்து சுடுகாட்டில் தகனம் செய்ய அல்லது புதைக்க உரிமை இல்லாமல் தனி சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது?
அதிலும் சுடுகாட்டுப் பாதையிலும் செல்ல தலித்துக்கள் தடை செய்யப்படுவதால் பாலத்தின் மூலம் தலித் பிணங்கள் கயிறு கட்டி இறக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு எதனால் நடைபெற்றுள்ளது? இவற்றுக்கு அரசு சார்பில் வேலூர் ஆட்சியர் மற்றும் வாணியம்பாடி வட்டாட்சியர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 28 ஆம்தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.