சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் ஏழைகள் என்பவர் யார் என்னும் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தது. இதற்கு பலரும் விண்ணப்பித்து நிதி உதவி வழங்குவதும் தொடங்கி உள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கு மனுவில் “ வரவுள்ள மக்களவை தேர்தலை மனதில் கொண்டு அரசு இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் தொகை வாக்காளர்களை ஆளும் கட்சிக்கு வாக்களிக்க வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்துக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிமன்றம் தமிழக அரசிடம், ஏழைகள் என்பது யார் என அரசு எவ்வாறு தீர்மானம் செய்துள்ளது என்னும் விவரங்களை நீதிமன்றத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.