சென்னை: சென்னை மாநகராட்சிக்கு இதுவரை 3,080 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கிடைத்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. இதற்கிடையில், கடந்த 24ந்தேதி அன்று சென்னையில் தொற்று பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளடங்கிய 3 எம்.பி, 22 எம்எல்ஏக்கள் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்குவதன் மூலம் 500 செறிவூட்டிகள் கிடைத்திடும் என உறுதியளித்தனர். மேலும் திமுக எம்எல்ஏக்கள் எம்.பி.க்கள் சென்னை மாநகராட்சிக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
அதைத்தொர்ந்து, தமிழக முதல்வரும் , கொளத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுபினருமான மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 3 எம்.பி.க்கள், 22 எம்எல்ஏக்கள் சார்பாக தலா 20ஆக்சிஜன் செறிவூட்டிகளை, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், ” சென்னை மாநகராட்சி சார்பில் 2,705 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களின் மூலமாக 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளன.
மாநகராட்சி இதுவரை 3080 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பெற்றுள்ளது. இவை பல்வேறு மருத்துவமனைகளுக்கும், கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.