சென்னை
இன்று மாலை சென்னை நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்த போதும் சென்னை நகரில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. அந்த மழை தொடரும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மழை பெய்யாமல் ஏமாற்றியது. அதன் பிறகு நேற்று ஓரிரு இடங்களில் மீண்டும் மழை பெய்தது.
இன்று மாலை முதல் சென்னை நகரில் பல பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அரும்பாக்கம், தி நகர், வளசரவாக்கம், அசோக்பில்லர், வடபழனி, அண்ணா நகர், அம்பத்தூர், சாலிகிராமம், எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளிலும் கனமழையாக பெய்து வருகிறது.
அத்துடன் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, தரமணி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், பல்லாவரம், அசோக் நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கே.கே.நகர், போரூர், ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர், திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தனி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை நகர மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வெப்பச் சலனம் காரணமாக பெய்து வரும் இந்த மழை மேலும் சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இம்மழை படிப்படியாக குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.