சென்னை

சென்னை காந்தி நகரில் கூவம் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் கூவம் நதியில் இறங்கிப் போராடி உள்ளனர்.

 

சென்னை நகரில் தீவுத்திடல் அருகில் கூவம் நதிக்கரையோரம் காந்தி நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  கூவம் நதிக்கரையை ஆக்கிரமித்து இங்கு குடியிருப்புக்கள் உள்ளதாகக் கூறி காலி செய்யக் கோரி இங்குள்ளோருக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு நோட்டிஸ் வழங்கப்பட்டது.   இவர்களுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இங்கு இருந்த 2092 வீடுகளில் இதுவரை 1742 பேர் காலி செய்து அவை அகற்றப்பட்டுள்ளன.  மீதமுள்ள 350 வீடுகளை இடிக்க இன்று காலை பொதுப்பணித்துறையினர் வந்துள்ளனர்.   இவர்களுக்கு இங்கு வசிப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தங்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 8 கிமீ தூரத்துக்குள் வீடுகள் ஒதுக்கப்படும் எனவும் பெரும்பாக்கம் சென்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அ:அளிக்காததால் மதியம் 1 மணி அளவில் இங்குள்ள மக்கல் கூவம் ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித், பீம்ராவ் குடியரசுக் கட்சித் தலைவர் லிங்கோஷ், ஆகியோர் காவல்துறை ஆணையரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  அதன் பிறகு போராடியவர்கள் ஆற்றை விட்டு வெளியேறினர்.  இதில் சிலர் மயக்கம் அடைந்ததையொட்டி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.