துரைப்பாக்கம் அருகில் உள்ள நடைமேம்பாலம் மீது பிற்பகல் 2 மணிக்கு சென்ற பெண்ணிடம் சில ஆண்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், அந்தப் பெண் நடைமேம்பாலம் மீது செல்வதை தவிர்த்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் தாண்டி குதித்து செல்வதை கடந்த ஆறு மாதமா வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்.

இதுபோல், நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாலங்கள் பலவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறப்பட்டதை ஒட்டி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த காவ்யா என்ற நிருபர் இதன் உண்மை தன்மையை அறிந்துகொள்ள முற்பட்டார்.

இதற்காக, பழைய மகாபலிபுரம் சாலை, ராயபேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 இடங்களில் உள்ள நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் இரவு 10 மணிக்கு மேல் சென்று பார்த்துள்ளார்.

மயான அமைதி இருள் சூழ்ந்த இரவு ஆகியவை சமூக விரோத செயல்களுக்கு ஏற்ற இடமாக இந்த இடங்களை மாற்றியிருக்கிறது. குடிகாரர்களும், மதுபாட்டில்களும் நிறைந்து கிடக்கும் இந்த நடைமேம்பாலங்களில் போதையில் அரைமயக்கத்தில் இருக்கும் நபர்களை கடந்து செல்லும் பெண்கள் பாலியல் சீண்டலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள சாலை வழியே கடப்பதே சிறந்ததாக உணரமுடிகிறது என்று அந்த செய்தி கூறியிருக்கிறது.

ராயபேட்டை புதுக் கல்லூரி அருகில் உள்ள நடைமேம்பாலம் அருகில் இருந்த காவலாளி ஒருவர் “சாலையை கடக்க நடைமேம்பாலத்தை பயன்படுத்தாதீர்கள் அது உங்களுக்கு நல்லதாக இருக்காது” என்று அந்த நிருபரை கவனமாக போக சொல்லி எச்சரிக்கும் அளவுக்கு மோசமாக இருந்துள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் ரூ. 3.85 கோடியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுரங்கப்பாதையின் நிலையும் அதுபோலவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தவிர, வால்டாக்ஸ் ரோடு, தி. நகர், சேத்பட், தில்லை கங்கா நகர், பழவந்தாங்கல், பெரம்பூர் மற்றும் மீனம்பாக்கம் என்று பல்வேறு இடங்களில் உள்ள நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் சமூக விரோதிகளின் இரவு நேர மது பார்களாகவும் கேளிக்கை விடுதியாகவும் மாறியுள்ளதுடன், மது பாட்டில்கள் மற்றும் சிகரெட் துண்டுகளால் நிரம்பி வழிவதாகவும் இதனால் பகலில் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து காவல்துறையினரிடம் விசாரித்த போது, பாதுகாப்பு குறைவான இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுபோன்ற இடங்களில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து புகார் ஏதும் வருவதில்லை என்றும் தயங்காமல் புகார் அளித்தால் மட்டுமே பெண்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், இதுபோன்ற புகார்களுக்கு :

பெண்கள் உதவி எண்: 1091, 181

குழந்தைகள் உதவி எண்: 1098

எஸ்எம்எஸ்: 95000 99100

காவலன் SOS செயலியைப் பதிவிறக்கவும் (கட்டுப்பாட்டு அறைக்கு செய்தியை அனுப்புகிறது மற்றும் அருகிலுள்ள ரோந்துக்கு எச்சரிக்கை செய்கிறது)

ஆகியவற்றை பயன்படுத்தவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

நன்றி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்