சென்னை

சென்னை நகரில் நேற்று செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது.

மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் கோடை விடுமுறை காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். சென்னையிலும் மலர் கண்காட்சியை நடத்தும் புதிய முயற்சியைத் தோட்டக்கலைத் துறை கையில் எடுத்தது.   கடந்த ஆண்டு  சென்னை கலைவாணர் அரங்கில் கண்காட்சி என்ற நடத்தியது. சென்னையைச் சேர்ந்தவர்கள் பலர் 3 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

இந்த மலர் கண்காட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, 2-வது ஆண்டாகச் சென்னையில் மலர் கண்காட்சியை நடத்தத் தோட்டக் கலைத் துறை முடிவு செய்தது.   இந்த ஆண்டு சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் நடத்தப்படுகிறது. நேற்று இந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக இருந்து ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.  எனவே தோட்டக்கலைத் துறை முதல்வர் இல்லாமல் மலர் கண்காட்சியைத் தொடங்கியது.

இந்தக் கண்காட்சியின் முத்தாய்ப்பாக, பூம்புகார் பட்டினத்தை அப்படியே கண் முன்னே காட்டும் விதமாகத் தத்ரூபமாக மலர்களால் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். காவிரி ஆறும், கடலும் சேருகின்ற இடத்தில் அமைந்திருந்த இந்த பூம்புகார் பட்டினத்தில் உள்ள மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி ஆகிய பகுதிகளின் நிகழ்வுகளை எடுத்துக் கூறும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. கண்காட்சியைப் பார்வையிடப் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. tnhorticulture.com என்ற தோட்டக்கலைத் துறை இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.